வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டுகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் முருகானந்தம், மற்றும் பலவேறு துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.
மழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி வாயிலாக பேசினார். அப்போது மழை முன்னேற்பாடுகள் குறித்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என விசாரித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் சென்னையில் ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் புதிதாக பாலகங்கள் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.