வங்கக் கடலில் உருவான “பெஞ்சல் புயல்” காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் செல்வி நகரில் மக்களை சந்தித்து குறைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. புயல் காலத்தில் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது. சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. மழை பெய்யும் போது சில இடங்களில் மழைநீர் தேங்கினாலும், மழை நின்றதும் வடிந்து விட்டது. சென்னையில் இன்னும் மழை நிற்கவில்லை. முழுமையாக மழை நின்றதும் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்துவிடும். விழுப்புரத்தில், மின்சார பிரச்சினை உள்ளதால் அமைச்சர், அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்துள்ளோம். மின்சாரத்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் அங்கு உள்ளனர். அதிகாரிகளும் உள்ளனர்.” என்றார். அப்போது, “எதிர்க்கட்சி தலைவரின் நேற்றைய குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘எந்தப் பிரச்சினை என்றாலும் நான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறோம்.. பெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு திறமையோடு கையாண்டு வருகிறது. அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை.’ என்றார். அவானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் துல்லியமாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், “வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி முன்கூட்டியே கணிப்பது?. வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.