ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா. (46) திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்துக்கு (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு) வந்தார். நேற்று காலையில் அவர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்தார். காலை 10 மணிக்கு மேல், திடீரென்று மூச்சு திணறல் ஏற்படுவதாக உடன் இருந்தவர்களிடம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாகவும் கூறி உள்ளார். பகல் 11 மணி அளவில் உடன் இருந்தவர்கள் அவரை ஈரோடு கே.எம்.சி.ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் ஈவெரா திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டார். விமானத்தில் கோவை வந்தடைந்த அவர் காரில் ஈரோட்டுக்கு வந்தார். இரவு 10.05 மணிஅளவில் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள திருமகன் ஈவெரா வீட்டுக்கு வந்தார். அங்கு திருமகன் ஈவெராவின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருமகன் ஈவெராவின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தாய் வரலட்சுமி, தம்பி சஞ்சய் சம்பத் மற்றும் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, காந்தி, முத்துசாமி, மகேஷ் தி.மு.க. மாநிலதுணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:முதல்வர் ஸ்டாலின்