புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 ஆகியவற்றை ரத்து செய்து 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த 3 சட்டங்களின் திருத்தம் போதிய ஆலோசனைகள் இல்லாமல் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரதிய நியாயா சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாக்ரிக்சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாக்ஷ்யா ஆதினியம் (பிஎஸ்ஏ) என்று 3 சட்டங்களுக்கும் சம்ஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. இது இந்திய அரசியலமைப்பின் 348-வது பிரிவை தெளிவாக மீறுகிறது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயமாகும்.
கூடுதலாக, இந்த சட்டங்களில் சில அடிப்படை பிழைகள் உள்ளன. உதாரணமாக, பாரதிய நியாயா சன்ஹிதாவில் 2 வெவ்வேறு வகை கொலை குற்றங்களுக்கு 2 உட்பிரிவுகள் உள்ளன. ஆனால் இவை இரண்டும் ஒரே தண்டனையைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தில், மேலும் சில விதிகள் உள்ளன. அவை தெளிவற்ற அல்லது சுயமுரண்பாடு கொண்டவையாகும்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டங்களுக்கு மாற்றாக மேற்கண்ட மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசுஉருவாக்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கணக்கில் கொள்ளும்போது, இந்த மூன்று சட்டங்களிலும் பல புதுமையான யோசனைகள் உள்ளன.