Skip to content
Home » கட்சிக்காக தினமும் 2 மணி நேரம் ஒதுக்குங்கள்.. திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் பேச்சு..

கட்சிக்காக தினமும் 2 மணி நேரம் ஒதுக்குங்கள்.. திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் பேச்சு..

கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை போத்தனூர் ரோடு பிவிஜி திருமண மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பகுதி செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் என 240 பேர் பங்கேற்றனர். முன்னதாக பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்று பேசினார். தொடர்ந்து நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது… நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கொடுத்திருக்கும் உற்சாகத்தோடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். நம்முடைய கழகத்துக்கு உள்ள கட்டமைப்பு தமிழ்நாட்டுக்கு வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. நாம் நினைத்தால் எந்தச் செய்தியையும் தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்க முடியும். எனவே நமது சாதனைப் பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும். இளைஞர்களிடம் கொள்கைகளை விதைப்பதுதான் மிக முக்கியம். அவர்கள்தான் எதிர்காலத்துக்கான விதைகள். எனவே, பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களை நடத்துங்கள். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து முதல் பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. நிர்வாகிகள் உங்களது குடும்பத்திற்கும், தொழிலுக்கும் நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அதே சமயம் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தைக் கழகத்துக்கென ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கழகப் பணிக்கு ஒதுக்குங்கள். அடிமட்டத் தொண்டர்களுக்கு நீங்கள்தான் பலமாகவும் பாலமாகவும் இருக்க வேண்டும். கோவை மாவட்டத்துக்குட்பட்ட பத்து சட்டமன்றத் தொகுதிகளையும் கழகக் கூட்டணி கைப்பற்றியாக வேண்டும். அதற்கான முதல் சந்திப்புதான் இந்தக் கூட்டம். 2026லும் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அது சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது. நான் ஒரு இலக்கு கொடுத்திருக்கிறேன். 200 தொகுதிகளில் வெற்றி என்பதுதான் அந்த இலக்கு. அதனால் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் 10 தொகுதிகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தி.மு.க. ஏழாவது முறையும் ஆட்சியைப் பிடிக்க எந்நாளும் உழைப்போம் இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!