நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது..
தி.மு.க., ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் நலத்திட்ட பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய போகிறேன்.
சட்டசபை தேர்தலை விட லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதை பொறுத்து கொள்ள முடியாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தி.மு.க.,வின் மதிப்பு சரிந்துவிட்டதாக கூறி வருகிறார். அவர் இந்த உலகத்தில் இருக்கிறாரா அல்லது கனவு உலகத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை. பெண்களிடம் கேட்டால், தி.மு.க.,வின் மதிப்பு அவருக்கு தெரியும். அவரின் கருத்தை மக்கள் காமெடியாக எடுத்து கொள்கிறார்கள். அவரின் கருத்தை நான் பொருட்படுத்துவது கிடையாது.
கடந்த ஐந்தாண்டுகளில் மக்களின் ஆதரவுடன் லோக்சபா, சட்டசபை, இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்திலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க.,வின் மதிப்பு சரியவில்லை. உங்கள் ஆட்சியில் தமிழகத்தின் மதிப்பை அடமானம் வைத்தீர்கள். உங்கள் ஆட்சியை காப்பாற்ற கவனம் செலுத்தியதால், உங்கள் கட்சி மதிப்பு சரிந்துள்ளது. அதை உணருங்கள். மேற்கு மண்டலம், எங்களின் செல்வாக்கு உள்ள தொகுதி எனக்கூறினீர்கள். லோக்சபா தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கி உள்ளது.
எங்களின் கவலை மக்களை பற்றிதான். மக்களால் ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட உங்களைப் பற்றி கவலையில்லை. மக்களுக்காக உழைத்து வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகிறோம். அடுத்த சட்டசபை தேர்தலில், நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.