மக்களுடன் முதல்வர்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் துவக்கி வைத்தார்.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று, அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதன் துவக்கவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் கோவை வருகை தந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து எஸ்.என்.ஆர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அங்குள்ள இ-சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், உட்பட பல்வேறு திட்டங்களை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.