வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது:- இந்த அரசை பொறுத்தவரை கல்வி, மருத்துவத்தை இரண்டு கண்களாக பாவித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தொகுதி வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அவ்வாறு பள்ளிகளில் ஆய்வுக்கு சென்றபோது காலை உணவு கூட சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறோம் என உருக்கமாக மாணவ, மாணவிகள் என்னிடம் கூறினார்கள். இதனை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதனை தொடர்ந்து காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி செப்டம்பர் 15ம் தேதி முதல் அதனை பல பகுதிகளில் நிறைவேற்றி வருகிறோம். விரைவில் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்.
சில பள்ளிகளில் மரத்தடியில் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. உடனடியாக அதை சீர் செய்யும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.