பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (11.9.2023) திடீர் ஆய்வு செய்தார்.
மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்த ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
உணவுக்கூடம் சமையல் பொருட்கள் வைக்கும் அறை, சமையலுக்கான பாத்திரங்கள் வைக்கும் அறை ஆகியவை சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றதா என்பதை பார்வையிட்டு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு பொருட்களின் இருப்பு உள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டார்.
மாணவ மாணவிகள் சத்தான உணவு உட்கொண்டு நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டுவரும் இந்த உன்னத திட்டத்தினை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும், நம் வீட்டு குழந்தைகளுக்கு எவ்வளவு தரமாக சுகாதாரமாக உணவு வழங்குகிறோமோ அதைப் போலவே ஒவ்வொரு பள்ளியின் குழந்தைகளுக்கும் உணவு வழங்கப்பட வேண்டும் என்று அங்கிருந்த சமையலருக்கும், துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.