தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி மாவட்டங்கள்தோறும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். ஏற்கனவே அவர்வேலூர் மாவட்டத்தில் இந்த ஆய்வு பணியை நடத்தினார். அதைத்தொடர்ந்து இன்று சேலம் மாவட்டத்திற்கு வந்தார். காலையில் அவர் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளை சந்தித்து மனுக்களை வாங்கினார்.
முதல்வர் ஓமலூர் வந்திருப்பதை அறிந்த பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அங்கு திரண்டு வந்து முதல்வரை பார்த்தனர். அவர்களிடம் சிறிது நேரம் உரையாடிய முதல்வர் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து திருச்சி போஸ் மைதானத்தையொட்டி உள்ள பழைய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.92.13 கோடியில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலைய பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பணியின் தற்போதைய நிலை, எப்போது முடிவடையும் என கேட்டார்.
இந்த கள ஆய்வின்போது, தலைமை செயலாளர் இறையன்பு, கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ்மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.