தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் இந்த வாக்குறுதியை தேர்தல் காலத்தில் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதியை வழங்கி இருந்தது.


நேற்று ஹாசன் மாவட்டத்தில் முதல்வர் சித்தராமையா பிரச்சாரத்திற்காக சென்றார். அப்போது அவரை அணுகிய சட்டக் கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ என்பவர், சித்தராமையாவிற்கு இலவச பயணச் சீட்டுகளாலான மாலை ஒன்றை பரிசாக வழங்கினார். அப்போது, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் மிகுந்த பயன் தருவதாகவும் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த மாணவி முதல்வரிடம் தெரிவித்தார்.