தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘முதல்-அமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்திற்கு புதிய உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திங்கட்கிழமை ரவா உப்புமா / சேமியா உப்புமா/ அரிசி உப்புமா/ கோதுமை ரவை உப்புமா வழங்கப்பட உள்ளது.
செவ்வாய்க்கிழமை ரவா காய்கறி கிச்சடி/ சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி/ கோதுமை ரவை கிச்சடி ஆகியவை வழங்கப்பட உள்ளது. புதன்கிழமை, காய்கறி சம்பாருடன் கூடிய ரவா பொங்கல்/ வெண் பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை, காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா/ ரவா உப்புமா /கோதுமை உப்புமா ஆகியவை வழங்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை சேமியா காய்கறி கிச்சடி/ சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி/ கோதுமை ரவை கிச்சடி ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவ/மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை / கோதுமை ரவை / சேமியா. உள்ளூரில் / அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் (சமைத்த பின் 150 – 200 கிராம் உணவு மற்றும் 100.மி.கி காய்கறியுடன் கூடிய சாம்பார்) ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்குதட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.