தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட எஸ்பிக்கள் அனைவரும் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்க கூடியவர்கள். மத நல்லிணக்கத்துடன் அனைவரிடமும் இணக்கமாக வாழும் தன்மை கொண்டவர்கள். இந்த சமூக கட்டமைப்பை பத்திரமாக கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு உங்கள் கையில் உள்ளது. எந்தவித சிறு பிணக்குகளும் மக்களிடம் ஏற்படாதவாறு காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து மிகவும் கவனமாக கடமையாற்ற வேண்டும்.
குற்றநபர்கள் மீதான வழக்கை துரிதமாக விசாரித்து குற்ற பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்வதை உறுதி செய்திட வேண்டும். இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுதான் சட்டத்தின் வளையத்துக்குள் குற்றவாளிகளை கொண்டுவர வழிவகுக்கும். இதில் தாமதம் என்பது நீதிக்கு செய்யக்கூடிய பிழையாக அமைந்துவிடும். இப்பணி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் காவல் துறை கண்காணிப்பாளர்கள் களப்பணியில் ஈடுபட வேண்டும். சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும். காவல் நிலையத்துக்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.