Skip to content
Home » பள்ளி்க்கு நடந்து சென்றது ஏன்?.. முதல்வர் ஸ்டாலின் ப்ளாஷ் பேக்..

பள்ளி்க்கு நடந்து சென்றது ஏன்?.. முதல்வர் ஸ்டாலின் ப்ளாஷ் பேக்..

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், அந்த பள்ளியின் முன்னாள் மாணவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- “இந்த பள்ளி நிகழ்ச்சிக்கு நான் முதல்-அமைச்சராக வரவில்லை. முன்னாள் மாணவராக தான் வந்திருக்கிறேன். உங்களிடம் தமிழ் பாடம் கற்றுக்கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன். நாம் படித்த பள்ளிக்குச் செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் நேற்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. பள்ளிப்பருவத்தில் எப்படியெல்லாம் துள்ளித் திரிந்தோம் என்பதையெல்லாம் நான் நினைத்துப் பார்த்தேன். இந்த பள்ளியில் நான் படித்த போது எனது தந்தை கலைஞர் கருணாநிதி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். பள்ளியில் அமைச்சரின் மகன் என்று நான் காட்டிக் கொள்வதை எனது தந்தை விரும்பமாட்டார். படிக்கின்ற காலத்தில் நானும் அவ்வாறு தான் இருந்தேன். இது என்னுடன் படித்த உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த பள்ளியில் படித்த போது தினமும் வீட்டில் இருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வரை நடந்து வந்து, 29-சி பேருந்தைப் பிடித்து ஸ்டெர்லிங் ரோடு நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து வருவேன். நடந்து வருவதற்கு பல காரணங்கள் உண்டு, அவற்றை இப்போது சொல்ல முடியாது. அவை எல்லாம் பழைய நினைவுகள். இப்போது கூட எனது பாதுகாவலர்கள் அனுமதித்திருந்தால் பேருந்திலோ அல்லது சைக்கிளிலோ வந்திருப்பேன். ஆனால் அதற்கு என்னை அனுமதிக்கமாட்டார்கள். இங்கிருக்கும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது ‘ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே” என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு மனிதனையும் சந்தோஷமாக வைத்திருப்பது இது போன்ற ஞாபகங்கள் தான். எனக்கும் இந்த பள்ளி வளாகம் பல மகிழ்ச்சியான ஞாபகங்களை அளித்திருக்கிறது. நான் அரசியலுக்கு வருவேன் என்றோ, ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக வருவேன் என்றோ நினைத்துப் பார்த்ததில்லை. நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனால் அது தற்போது நடந்துள்ளது. இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு நான் வந்ததற்கு இந்த பள்ளியும் ஒரு முக்கிய காரணம் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.” இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *