Skip to content
Home » சாம்சங் ஊழியர்கள் கைது…… சிஐடியூ கண்டனம்

சாம்சங் ஊழியர்கள் கைது…… சிஐடியூ கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.9-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிஐடியு தொழ்ற்சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் இன்று (அக்.9) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:,  போராட்டம் நடத்தப்படும் இந்த இடம் தனியாருடையது. அப்படியிருக்க இங்கே வந்து கைது செய்ய காவல்துறைக்கு எந்த உரிமையும் கிடையாது. இவ்வளவு அக்கிரமமாக காவல்துறை நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல.

இதில் முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக தொழிலாளிகளை மிரட்டுவதிலும் அவர்களை அச்சுறுத்துவதிலும் காவல்துறையே ஈடுபடுகிறது.

31 நாட்களாக வேலை நிறுத்தம் நடத்துவதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் எங்களுடைய எதிர்ப்பை காட்டி வருகிறோம். கார்ப்பரேட்க்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுவது தவறு.

சங்கத்தை பதிவு செய்வது என்பது எங்களுடைய உடனடி கோரிக்கை அல்ல. பதிவு செய்தால் எங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவோம் என்று எப்போதும்; எங்கேயும் நாங்கள் சொல்லவே இல்லை. ரிஜிஸ்ட்ரேஷன் என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது எங்களுக்குத் தானாகவே கிடைக்கும். அதற்கு அமைச்சருடைய தயவு எங்களுக்குத் தேவையில்லை.

எங்கள் கோரிக்கை ‘சங்கத்தை ஏற்க வேண்டும்; அங்கீகரிக்க வேண்டும்’ என்பதே. அதைக் கூட நிறுவனத்தை ஏற்றுக்கொள்ள செய்ய இயலவில்லை என்றால் எதற்காக அரசு; எதற்காக ஆட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இன்று காலை முதலே போராட்டப் பகுதியில் பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் போராடி வந்தனர். அவர்களை வாகனங்களில் ஏற்றி சுற்றியிருக்கும் தனியார் திருமண மண்டபங்களில் அடைத்துவைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!