மாநிலங்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மாநில அரசுகளை கலைத்தது பற்றி குறிப்பிட்டார். அதற்கு இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். காரைக்குடியில் அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசின் ஆட்சிகள் கலைக்கப்பட்டதை யாரும் இல்லை என்று சொல்லவில்லையே. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் பயன்படுத்தினார்கள். தவறாக பயன்படுத்தியிருந்தால், அந்த அரசை மக்கள் அன்றைக்கே தண்டித்திருப்பார்கள். எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகுதான், ஒரு அரசை நீக்குவதற்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டன. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநில அரசுகளை நீக்குவது கிடையாது. எதிர்க்கட்சியில் இருக்கின்ற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடுகின்றனர். ஒரு அரசை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. இவர்கள் விலைக்கு வாங்குகின்றனர்” என்றார்.