Skip to content
Home » கனமழை ……முன்னெச்சரிக்கை தீவிரபடுத்துங்கள்…கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை

கனமழை ……முன்னெச்சரிக்கை தீவிரபடுத்துங்கள்…கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை

  • by Senthil

வடகிழக்கு பருவமழை  கடந்த அக்டோபர்  மாதம் 14ம் தேதி தொடங்கியது. தற்போது வரை  இந்த மழை தமிழகத்திற்கு இயல்பை விட சற்று அதிகமான மழை பொழிவை  தந்திருக்கிறது.

 இந்த  நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அது தாமதமாகி வந்தது.    ஆனால் நேற்று மதியம் தென்கிழக்கு வங்கக்கடலில்காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய  4 மாவட்டங்களில் நேற்றிரவு முதலே பரவலாக கனமழை கொட்டியது.  இன்று காலையிலும் பரவலாக மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  சென்னையில் மழை பெய்து வருவதால் மும்பை, டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 40 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னை மடிப்பாக்கத்தில் 6.6 செ.மீ. மழை பெய்துள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் – தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்கள்,  மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  அதே நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,  வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும்  மேற்கண்ட  12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுடன்   ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தம் காரணமாக தொடர்ந்து 6 நாட்கள் தமிழகத்தில்  பரவலாக கனமழை பெய்யும்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது . கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!