இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இது தவக்காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து, தங்களுக்குப் பிடித்த காரியங்களை தவிர்த்து இயேசுவை தியானிப்பார்கள். உண்ணும் உணவு, உடைகள் ஆகியவற்றில் அலங்காரங்களைத் தவிர்த்து பிறருக்கு உதவி செய்து ஆன்மிக வலிமையை இக்காலக் கட்டத்தில் பெறுவார்கள்.
தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் தேதி இன்று அனுசரிக்கப்படுகிறது. இது யூதர்களின் பாரம்பரியம். காலப்போக்கில் அனைத்து திருச்சபைகளும் `சாம்பல் புதன்’ நாளை பின்பற்றி வருகிறார்கள். குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மக்கள் ஓலையினாலான சிலுவைகளை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம்.
சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறும் வழக்கத்தின்படி இன்று காலை அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஏழைகளுக்கு உதவி செய்யும் தியாக நாட்களாக இவை பின்பற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அந்த நாட்களை நினைவு கூர்ந்து புனிதவாரம் அனுசரிக்கப்படுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை மார்ச் மாதம் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.