கோவை போத்தனூர் பகுதியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் இணைந்து “சமத்துவ கிறிஸ்மஸ் விழா” சிறப்பாக கொண்டாடினர்.தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான், காங்கிரஸ் மூத்த தலைவரும், சிறுபான்மையினர் நலவாரிய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லா, இந்து மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள், கிறிஸ்தவ பாதிரியாார்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் மும்மதத்தினர் கிறிஸ்துமஸ் விழா கேக் வெட்டி கொண்டாடினர்.
மேடையில் உரையாற்றிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், பீட்டர் அல்போன்ஸ், ஜவாஹிருல்லா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மத நல்லிணக்கத்தை, சமத்துவம் சகோதரத்தை வலியுறுத்தி விழாவில் உரையாற்றினர்.விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழா நிறைவுபெற்றதும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது : பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.இந்து,முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒன்றாக இணைந்து மத நல்லிணக்கத்தோடு எல்லோருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் ஒட்டு மொத்த சமுதாயத்தின் முன்னணி தலைவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.பல் சமய நல்லுறவு இயக்கத்தினர், கொரோனா கால பேரிடர் கால பொது மக்களை காக்கும் பணிகளை பட்டியலிட்டு பார்க்கும்பொழுது பல்வேறு வேற்றுமைகளில் ஒற்றுமை காண்கிற பகுதியாக கோவை உள்ளதை நினைத்து பெருமையாக கருதுகின்றோம்.சிறுபான்மையர் தினமான இன்று இந்த நிகழ்ச்சி இங்கே நடைபெற்று இருக்கின்றது.
தமிழ்நாட்டின் மக்களுக்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்காக அரும்பாடு படுகின்ற நிலையில் “மக்களின் முதல்வர்” அவர்களிடம் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படுகின்றன.
அதன் அடிப்படையில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் செயல்பாடுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிவாசல் பராமரிப்பு, தர்காக்கள் பராமரிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கி உலமாக்கள் நல வாரியத்தில் 10,000 மேற்பட்டோருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
பெண்களுக்கு தையல் மிஷின்கள் இன்று வழங்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 2500 பேருக்கு வழங்க திட்டம் தீட்டப்பட்டு இருக்கின்றன.பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருகின்றோம். பல் சமய நல்லுறவு இயக்கத்தின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அடைகின்றோம்.இதுவே எங்களுடைய விருப்பம் அனைவரும் சமத்துவத்துடன் சகோதரத்துடன் வாழ வாழ வேண்டும்.எல்லோரும் இணைந்து வாழ வேண்டும்.இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் தந்து வாழ வேண்டும் என்கிற தத்துவத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டு செயல்படுவதை பார்க்கின்ற நேரத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.