டிசம்பர் 25-ந்தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள். இதுதவிர, தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பார்கள்.
இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 25-ந்தேதியன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். அந்தவகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சாந்தோம், பெசன்ட்நகர் உள்பட தேவாலயங்களில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவில் இருந்தே சிறப்பு ஆராதனையும், பாடகர் குழுவினரால் சிறப்பு பாடல்கள் பாடப்பட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்திலும் இன்று இரவு முதல் நாளை காலை வரை கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணி வந்து உள்ளனர்.
திருச்சியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இன்று இரவு முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்தும்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். சென்னையிலும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட 350 தேவாலயங்கள் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இன்று (24-ந்தேதி) நள்ளிரவு தொடங்கி நாளை வரை பாதுகாப்பு பலமாக இருக்கும். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.