தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டி வரும் நிலையில், சென்னையில் மட்டும் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெருநகர சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். நாளை இரவு முதல் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பாகவும் கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை இரவு முதல் 25-ம் தேதி வரை சென்னை முழுவதும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்பட 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.

பாதுகாப்புப் பணியில் காவல்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோனியார் தேவாலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களில் சட்டம் – ஒழுங்கு குற்றப் பிரிவு, மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.