முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் இருந்து விண்ணமங்கலம் செல்ல பூதலூர் ரவுண்டானா வழியாக முதல்வர் வேனில் சென்றார். அப்போது அந்த ரவுண்டானாவில் ஏராளமான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று முதல்வரை வரவேற்று மனுக்கள் கொடுத்தனர். மக்கள் நிற்பதை பார்த்த முதல்வர் வேனை நிறுத்தினார்.
அப்போது பூதலூரை சேர்ந்த பிரபு (35) என்பவர் தனது 7 வயது மகள்(2ம் வகுப்பு மாணவி) சிவதர்சனியை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு மகள் கையால் மனு கொடுத்தார். அந்த மனுவில்.. பூதலூரில் மேலும் பல நலத்திட்டம் செய்ய வேண்டும். பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படவேண்டும். பூதலூரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என கோரியிருந்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் சிவதர்சனியிடம், என்ன படிக்கிறாய், பெயர் என்ன, என்று கேட்டார். அதற்கு அவர் பதில் அளித்தார். நன்றாக படிக்க வேண்டும் என கூறிய முதல்வர் குழந்தை சிவதர்சனிக்கு சாக்லேட் கொடுத்தார். அதைப்பெற்றுக்கொண்ட சிவதர்சனி, நன்றி என முதல்வரிடம் கூறினார். பின்னர் முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.