சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார்.
தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரக்குதிரை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். வருகிற 14ம் தேதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல்11.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 17ம் தேதி முத்துப்பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 18ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. தேரோட்டம் முடிந்து எட்டாம் நாளான 22ம் தேதி இரவு அம்மன் தங்கக்கமல வாகனத்தில் புறப்படுகிறார்.