அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லாவுடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பெட்டிகளை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கவுள்ள பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணப்படவுள்ள மையங்கள், தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறைகள், ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களையும், பாதுகாப்பு ஏற்படுத்துவது குறித்தும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர்கள் (ஜெயங்கொண்டம்) கலிலூர் ரகுமான், வட்டாட்சியர் (தேர்தல்பிரிவு) வேல்முருகன், செயற்பொறியாளர் (பொ.ப.து) அன்பரசி மற்றும் வருவாய்த்துறை, காவல்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.