சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கில், சித்ராவின் மரணத்திற்கும் அவரது கணவர் ஹேம்நாத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனக் கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிகழ்ச்சித் தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை, நடனக் கலைஞர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் நடிகை சித்ரா. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்து, தனிப்பட்ட ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டத்தை தனக்கென உருவாக்கி வைத்திருந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம்
நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது நாசரேத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டும்
விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, இந்த மனுவானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சித்ராவின் கணவர் ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கில் கூடுதலாக இன்னும் 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.