மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி பர்மா காலனி கார்த்தி நகரை சேர்ந்தவர் பிரபாகர்(30). இவரது மனைவி மாலதி (27). இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரபாகர் எந்த வேலைக்கும் செல்லாமல், குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்ததால், மாலதி கோபித்துக்கொண்டு திருவிழந்தூர் அப்பங்குளம் தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் மாலதி சமாதானம் செய்ய வந்த பிரபாகர் அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் குடித்துவிட்டு வந்து, மாலதியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பிரபாகர். ஆனால், மாலதி செல்ல மறுத்ததைத் தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை, அப்பங்குளம் பகுதியில் வசிக்கும் மாலதியின் சித்தப்பா விவசாய கூலித் தொழிலாளியான பாக்கியம் (70) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.
இதையடுத்து, உன்னால்தான் எல்லா பிரச்னையும், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை வீட்டு வாசலில் பாக்கியம் தலையில் கல் உரலை போட்டு, ரத்தம் சொட்ட சொட்ட படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து, டிஎஸ்பி சஞ்சீவ்குமார், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பாக்கியத்தின் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாக்கியத்தை கொன்றது அவரது மருமகன் பிரபாகர்தான் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.