சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. அதே வேளையில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கிறார். இந்த நிலையில் சீனாவில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்தும் முடிவுக்கு தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 63 ஆகவும், பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயது 50-ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.