உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில் கிரிவலப் பாதையில் ஏராளமான குழந்தைகள் பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். இதனை பார்த்த சமூக நலத்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு அவர்களை சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சேவை மையத்தில் சேர்த்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பெரும்பாலான குழந்தைகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் என்றும் திருவிழா காலங்களில் பெற்றோர்களே தங்களது குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்று சிறுவர்களை பிச்சை எடுக்க வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.