Skip to content
Home » குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

ஜனவரி 3 ஆம் தேதி, செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரசில் விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் பயணம் செய்துள்ளார்.  அதே பெட்டியில் 19 மாத குழந்தையான அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்தனர். அந்த பயணத்தின்போது குழந்தை அட்னான் ஒரு பொம்மை ரயிலை வைத்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அவனோடு விளையாடிய சக பயணிகள் யாரையும் பொம்மை ரயிலை அட்னான் தொடக்கூட விடவில்லை. அதை மீறி யாரேனும் எடுத்தால் கூச்சல் போட்டு அழுதுள்ளான்.

அட்னானின் குடும்பத்தினர் கிஷன்கஞ்சில் இறங்கிய போது அட்னான் தனது பொம்மை ரயிலை இருக்கையிலேயே விட்டுசென்றதை  பட்நாயக் பார்த்துள்ளார். உடனடியாக ரயில் உதவி எண்  139 ஐத் தொடர்பு கொண்டு, பொம்மையைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தார்.

வழக்கமாக இந்த ஹெல்ப்லைன் அவசர தேவைகளுக்காகவும், முக்கியமான பொருட்களை மக்கள் தொலைத்துவிட்ட வழக்குகளை கவனிக்க செயல்படும். அந்த குழந்தையின் பொம்மை ரயில் அந்த குழந்தைக்கு முக்கியமான பொருள்தானே என்ற அடிப்படையில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த டிக்கெட் ரயில் நிலையத்தின் முன்-கவுண்டரில் வாங்கப்பட்டதால் பயணிகளின் பெயர்களைத் தவிர வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ரயில்வே துறையில் முன்பதிவுக்கு முன் நிரப்பப்பட்ட  சீட்டைக் கண்டறியும் பணிக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன்படி  அட்னானின் பெற்றோர்கள் அலுபாரி ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் காசி கிராமத்தைச் சேர்ந்த மோஹித் ரசா மற்றும் நஸ்ரீன் பேகம் என அடையாளம் காணப்பட்டனர்.

பின்னர் விபூதிபூஷன் பட்நாயக் மற்றும் ரயில்வே குழுவினர் அவரது வீட்டிற்குச் சென்று பொம்மையைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். அதைக்கண்டதும் குழந்தை அவர்களுக்கு தனது மழலை ஸ்டைலில் நன்றி தெரிவித்துள்ளது.

“எனது 19 மாத குழந்தை தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்த  ரயில் பொம்மையை ரயிலில் மறந்துவிட்டது. ஒரு பொம்மைக்காக யாரும் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள் என்று நான் நினைத்தேன். அதனால் நான் புகார் எதுவும் பதிவு செய்யவில்லை. என் குழந்தைக்கும் வருத்தமாக இருந்தது, அனால் இப்படி முயற்சி செய்து கண்டு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி ” என்று அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!