கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பூலாகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். சென்னையில் சுவீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரிகா விவசாயம் பார்த்துக்கொண்டு தனது 2 குழந்தைகளான ஸ்ரீநிகா (5) மற்றும் அனிருத் (3) ஆகிய இரு குழந்தைகளை பராமரித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று மாலை இரு குழந்தைகளும் வீட்டின் வெளிப்புறம் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த ஊர் கிணற்றில் தவறி இரு குழந்தைகளும் விழுந்துள்ளன. சுமார் ஒரு மணி நேரம் அவ்வழியே யாரும் செல்லாததால், இரு குழந்தைகளும் கத்தி கத்தி துடிதுடித்து இறந்து போயின. சுமார் ஒரு மணி நேரம் கழித்து
குழந்தைகளின் தாயார் சந்திரிகா தேடியுள்ளார். பின்னர் இரு குழந்தைகளும் கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வந்ததையடுத்து போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் தேடிப் பார்த்ததில் இரு குழந்தைகளையும் சடலமாக மீட்டெடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இரு குழந்தைகளையும் போச்சம்பள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.