ராஜபாளையம் அடுத்த தேவதானத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரின் மனைவி ராமுத்தாய் . இத்தம்பதிக்கு நிஷா -அர்ச்சனா தேவி என்று இரண்டு மகள்கள் இருந்தனர். வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்த முத்துக்குமார் தினமும் வீட்டிற்கு வரும்போது தனது மனைவி ராமுத்தாய் அவரின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் செல்போனில் பேசுவதை கவனித்திருக்கிறார். இதை கண்டித்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மாலையில் ராமுத்தாய் தன் குடும்பத்தினருடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார் கணவர் முத்துக்குமார். இதை பார்த்ததும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மனைவியின் செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்து இருக்கிறார். இதில் இரண்டு பேருக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது .
அப்போது நடந்தது தொடர்பாக இரண்டு நாட்களாக குடும்பத்தில் பிரச்சனை நடந்து வந்திருக்கிறது. நேற்று மாலையில் நடந்த தகராறில் வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறி இருக்கிறார் ராமுத்தாய். அதன் பின்னர் நேரமாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களிலும் தேடிப் பார்த்திருக்கிறார் முத்துக்குமார். அக்கம் பக்கத்தினரும் தேடிப் பார்த்திருக்கிறார்கள்.
இன்று காலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் 2 சடலங்கள் மிதந்துள்ளன. ஊர்மக்கள் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிணற்றில் இருந்த சடலங்களை மீட்டுள்ளனர். அப்போது ராமுத்தாய் மூத்த மகள் லிசா என்பது தெரிய வந்திருக்கிறது. மீண்டும் தேடுதலுக்கு பின்னர் இரண்டாவது மகளின் சடலத்தையும் கிணற்றிலிருந்து மீட்டிருக்கிறார்கள்.
குடும்பத்த தகராறில் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட ராமுத்தாயின் செயல் கிராமத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.