பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அ.மேட்டூரில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் இன்று (27.12.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், முதற்கட்ட சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18.12.2023 அன்று முதல் 21.12.2023 வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு பேரூராட்சி பகுதிகளிலும் இன்று (27.12.2023) முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
அதனடிப்படையில் இன்று அரும்பாவூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த மூன்று மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள். மேலும், மின்சாரத்துறையின் சார்பில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்த நபர்களுக்கு உடனுக்குடன் பெயர் மாற்றத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராமலிங்கம், அரும்பாவூர் பேரூராட்சித் தலைவர் வள்ளியம்மை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டி.சி.பாஸ்கர், பேரூராட்சிகளுக்கான உதவி இயக்குநர் ச.சாலியப்பன், அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.