மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்த விழாவில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேன், ஒலம்பியன் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் விளையாட்டுச் சுடரை ஏந்தி வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க, அவர் அரங்கில் சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் முதலமைச்சர் கோப்பையை அறிமுகம் செய்தார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த போட்டி தொடர்பான கோப்பு தான். இந்த ஆண்டு பள்ளி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பாக நடத்தப்படக்கூடிய போட்டிகளில் 11,50,000 பேருக்கு மேல் பங்கேற்கிறார்கள். இதற்காக ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் தொடர்பாக 29 மாவட்டங்களுக்கு நானே நேரில் சென்று வழங்கி உள்ளேன். தமிழ்நாடு சார்பில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 6 பேருக்கும் தலா ரூ.7 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இதில் 4 பேர் பதக்கங்களுடன் திரும்பி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்கள். இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்போர், இனி வரக்கூடிய நாட்களில் சர்வதேச அளவில் பங்கேற்று வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.