Skip to content
Home » முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

முகச் சிதைவு நோயால் பாதித்து குணமான சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே  வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி டான்யா, அறிய வகை முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்தனர். இதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் குழந்தையின் உடல் நிலையினை கருதி மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்றதுடன் சிறுமி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களின் பெற்றோருக்கு இலவச வீட்டு மனையினை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டித்தர ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் வீட்டு மனை அரசின் சார்பில் வழங்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 சதுரடிக்கு மிகாமல் வீடுகட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்பட்டு சிறுமி தான்யாவின் குடும்பத்தினருக்கு  வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி டான்யா, “இரண்டு வருடத்திற்கு முன் என்னை பலரும் கேலி செய்தனர். தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் என்னுடன் அனைவரும் இயல்பாக பழகுகின்றனர். தற்போது எனக்கும் சொந்தமாக வீடு உள்ளது என நண்பர்களுடன் மகிழ்ச்சியாக தெரிவிப்பேன். எதிர்காலத்தில் எனக்கு மருத்துவராக ஆக வேண்டும் ஆசை உள்ளது. அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நன்றி” என்றார்.

பின்னர் பேசிய சிறுமி டான்யாவின் தாயார் செளபாக்யா, “முன்பெல்லாம் எனது குழந்தையின் முகத்தை மறைத்து பல இடங்களுக்கு சென்றேன். எனது மகளுடன் சக நண்பர்களே பழகாமல் இருந்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் இந்த நிலை முழுவதுமாக மாறியுள்ளது. தற்போது எனது மகள் எவ்வித சிக்கலும் இன்று பள்ளிக்கு சென்று வருகிறார். அனைவரும் இயல்பாக பழகுகின்றனர். மற்ற மாணவர்களை போல் எனது மகளும் அனைத்து கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். எங்களுக்கும் தற்போது வீடு கிடைத்துள்ளது. முதலமைச்சரின் உதவியால் எங்கள் குடும்பமே முன்னேறியுள்ளது முதலமைச்சர் எங்களுக்கு கடவுள் போன்றவர்” என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.