சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலாவதாக பேட்டிங் செய்த அந்த அணி, 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 244 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 100 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது இந்திய அணியின் அற்புதமான ஆட்டம். சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள். சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலிக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.