சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டனர். சிதம்பரம் நாடாளுமன்ற த்தில், 7,53,643 ஆண் வாக்காளர்களும், 7, 66,118 பெண் வாக்காளர்களும், 86 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 15,19,847 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1709 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை நேற்று செலுத்தினர்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 74.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு முடிந்த பிறகு, கட்சி முகவர்களின் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் இன்று தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரி ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது. . கல்லூரியில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகள், பொது தேர்தல் பார்வையாளர் போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அந்த அறைகளில் 24 மணி நேர வெப்கேமரா கண்காணிப்பும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இக்கல்லூரி முழுவதும் வெப்கேமரா கண்காணிப்பு, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு, உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.