சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ நிகழ்ச்சியை ஜன.13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. அதற்கான சிறந்த கலைஞர்களை 7 மண்டலங்களில் இருந்து தேர்வு செய்து, மாநில அளவில் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025 நிகழ்ச்சியை ஜன.13-ம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைப்பார். அதற்குப் பிறகு 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 18 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சென்னையில் பல்வேறு இடங்களிலும், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மட்டுமல்லாமல், மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற பல்வேறு பகுதிகளிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படும்.
பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறக்கூடிய இந்நிகழ்ச்சியில் சுமார் 1,500 கலைஞர்கள் பல்வேறு குழுக்களாக கலந்து கொள்வார்கள். அதற்கான பயிற்சியும், புதிய முறைகளை புகுத்துவதற்கான முயற்சியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.