வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;
வடதமிழ்நாட்டின் மீது மேகத் திரள் சூழ்ந்துள்ளதால் சென்னையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நெருங்கி வரும். அக்.16, 17 தேதிகளில் சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அக்.1 முதல் இன்று வரை 100 மி.மீ. மழை பெய்துள்ளது. வருகிற நாட்களில் வட கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையும். 16, 17-ம் தேதிகளில் வட தமிழகம், வட கடலோர மாவட்டங்களில் கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், சென்னையில் சராசரியாக 5 செ.மீ. மழை பெய்துள்ளது. இரவு நேரம் அல்லது காலை நேரங்களில் மழை பெய்யும் என்று கூறினார்.