சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
காவலில் எடுக்கப்பட்டுள்ள ஞானசேகரனிடம் நேற்று முன் தினம் இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் நேற்று அதிகாலையில் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு ஞானசேகரன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரனிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் விசாரணையில் உள்ள ஞானசேகரனுக்கு அதிகாலையில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.