சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பிரஸ் கிளப்புக்கு (சென்னை பத்திரிகையாளர் மன்றம்) 1999ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாமல் சில குறிப்பிட்ட நபர்கள் பத்திரிகையாளர் மன்றத்தை ஆக்கிரமித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு பின் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு டிச.15ம் தேதி தேர்தல் நடைபெறும் என நீதிபதி பாரதிதாசன் கடந்த நவ.28ம் தேதி அறிவித்தார். இதில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய 6 நிர்வாகிகளும், 5 நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30ம் தேதி முதல் டிச.7ம் தேதி வரை நடந்தது. வேட்பு மனுக்கள் டிச.9ம் தேதி பரிசீலிக்கப்பட்டது. டிச.10ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணி, ஒற்றுமை அணி, மாற்றத்திற்கான அணி மற்றும் சுயேச்சையாகவும் 44 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நீதிக்கான கூட்டணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் (தினகரன்), பொதுச்செயலாளராக அசீப் முகமது (அரண் செய்), பொருளாராக மணிகண்டன் (ஜெயா டிவி), துணை தலைவர்களாக மதன் (நியூஸ் 18 தமிழ்நாடு) மற்றும் சுந்தரபாரதி (புதிய தலைமுறை), இணை செயலாளராக நெல்சன் சேவியர் (ஒன் இந்தியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். நிர்வாக குழு உறுப்பினர்களாக நீதிக்கான கூட்டணியை சேர்ந்த ஸ்டாலின் (புதிய தலைமுறை), அகிலா ஈஸ்வரன் (தி இந்து), பழனிவேல் (பாலிமர் டிவி), விஜயகோபால் (ஏஎன்ஐ) மற்றும் ஒற்றுமை அணியை சேர்ந்த கவாஸ்கர் (தீக்கதிர்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தினகரன் சுரேஷ் 659 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.கே. 398 ஓட்டுகள் பெற்றார். பொதுச்செயலாளர் ஆசீப் 734 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார்.
பொருளாளர் மணிகண்டன் 803 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லட்சுமணன் 495 ஓட்டுகள் பெற்றார்.