சென்னை போன்ற பெருநகரங்களில் குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை பெருநகர போலீசார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அறிவியல் சாதனம் தான் ” ரெட் பட்டன், ரோபோட்டிக் காப்”. குறிப்பாக இது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தப்பட உள்ளது.
24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் சுற்றி சுழன்று அலசி ஆராயும்.
இந்த சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு கிடைக்கும்.
உடனடியாக காவல் துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் இதனால் முடியும்.
ஆபத்தில் உள்ளவரை காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள இதனால் வசதி செய்யப்படும்.வீடியோ கால் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் .
மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் ” ரெட் பட்டன், ரோபோட்டிக் காப்” என்ற இந்த சாதனத்தை பொருத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை போலீசாரின் இந்த நடவடிக்கை மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், குற்றங்களும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கலாம்.