வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ. முதல் 80கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அப்போது பெரும்பாலான இடங்களில் கன மழையும் கொட்டியதுடன், கடுங்குளிரும் வாட்டியது.
புயல் எந்த திசையில் கரையை கடந்து செல்லும் என்று வானிலை மையம் அறிவித்ததோ அந்த இடங்களில் பாதுகாப்பு கருதி நேற்று இரவு மின்சாரம் தடை செய்யப்பட்டது. பல இடங்களில் காற்றின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாகவும் சில இடங்களில் மின்சாரம் தடை பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மரங்கள் முறிந்து விழுந்தன. அப்படி இருந்தும் நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தபோதே தீயணைப்பு துறையினர், மாநகர போலீசார், மின்சாரத்துறை ஊழியர்கள் உடனுக்குடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு எந்தெந்த இடங்களில் மின் தடை ஏற்பட்டது என கேட்டு அறிந்தார். சம்பந்தப்பட்ட இடங்களில் மின் பொறியாளர், ஊழியர்கள் யார், யார் இருக்கிறார்கள் என தொடர்பு கேட்டு நிலைமைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை சீரமைக்க உத்தரவிட்டார். இரவு விடிய விடிய மின் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை சிறப்பு படையினரும் சென்னையில் முறிந்து கிடந்த சுமார் 400 மரங்களை உடனுக்குடன் அறுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிலைமைகளை அதிகாரிகள், அமைச்சர்களிடம் போன் மூலம் கேட்டறிந்தார்.
வடசென்னையில் கடலோர மீனவ பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காலையில் உணவு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று காலை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
அதிகாலை 3 மணிக்கே சென்னையில் பிரதான மார்க்கெட்டான கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர். வியாபாரம் மும்முரமாக நடந்தது. அதுபோல பால் வினியோகமும் பாதிக்கப்படவில்லை. இன்று காலை வழக்கம் போல அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. பஸ் போக்குவரத்தும் நடந்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல நடந்தது.
மின்வாரிய சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, முதல்வர் அவர்களின் அறிவுரைகளை ஏற்று விடிய விடிய மின் துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பு கருதியே பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அவை கள ஆய்வுக்கு பின் உடனடியாக இணைப்பு தரப்படும். மழை காலத்தை சமாளிப்பதற்காகவே ஏற்கனவே 44 ஆயிரம் மின் கம்பங்களை மாற்றி அமைத்தோம். இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. சென்னையில் மட்டும் நேற்று இரவு 1100 பணியாளர்கள் மழையிலும் பணி செய்தார்கள். இன்று பிற்பகலுக்குள் அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் மின் இணைப்பு கொடுத்து விடுவோம் என்றார்.