Skip to content

சென்னையில் நடந்த விநோத கொலை…. கடவுள் சொன்னதால் கொன்றேன் என கொலையாளி வாக்குமூலம்

  • by Authour

கோயில் அருகே தினமும் பெண்களை அழைத்து வந்து பேசிய பிறகு அறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததால், நான் சிவபெருமானிடம் சூடம் ஏற்றி கேட்டதற்கு ‘அவன் கெட்டவன் கொன்றுவிடு’ என்று கூறியதால் பெயின்டரை கத்தியால் வயிற்றில் 18 முறை குத்தி துடிக்க துடிக்க கொன்றேன் என்று காவல் நிலையத்தில் சரணடைந்த நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 50 வயது நபர் ஒருவர், கையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் வந்தார். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே கத்தியுடன் வந்த நபரிடம் கனிவாக பேச்சு கொடுத்தனர். அப்போது, எனது பெயர் கமல் உஸ்மான். நான் அதிதீவிர சிவ பக்தர். கடவுள் உத்தரவிட்டார். நான் ஒருவனை கொன்றுவிட்ேடன்’ என்று கூறினார். முதலில் போலீசார் இதை விளையாட்டாக நினைத்தனர். பிறகு அந்த நபர் கூறிய இடத்திற்கு காவலர்களை அனுப்பி பார்த்த போதுதான் காவல்நிலையத்திற்கு வந்த நபர் கூறியது உண்மை என்று தெரியவந்தது. உடனே போலீசார் அந்த நபரிடம் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில் கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் சரணடைந்த கமல் உஸ்மானிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: நீலாங்கரை அறிஞர் அண்ணாநகர் 7வது தெருவை சேர்ந்தவர் கமல் உஸ்மான் (48). இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கமல் உஸ்மானுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு கமல் உஸ்மான் தனியாக திருவான்மியூர் கோயில் அருகே வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.

மனைவி பிரிந்ததால் கமல் உஸ்மான் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதேநேரம், பிறப்பில் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், தீவிர சிவ பக்தராக மாறி உள்ளார். கொரோனா காலத்தில் வியாபாரம் சரியாக இல்லாததால், வியாபாரத்தை விட்டுவிட்டு, கமல் உஸ்மான் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் அருகே கிடைக்கும் வேலையை செய்துள்ளார்.

மேலும், அதே பகுதியில் உள்ள மூக்குப்பொடி சித்தர் கோயிலுக்கும் தினமும் சென்று வழிபாடு செய்து அங்கு கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு வந்துள்ளார். இதற்கிடையே கோயிலுக்கு செல்லும் போது, திருவான்மியூர் திருமுடி விநாயகர் கோயில் அருகே திருவான்மியூர் பி.டி.கே. நகரை சேர்ந்த பெயின்டர் செந்தில் குமார் (51) என்பவர் தினமும் இளம்பெண்களை அழைத்து வந்து பேசியுள்ளார். இவர், வடமாநில தொழிலாளர்களுடன் திருமுடி விநாயகர் கோயில் அருகே உள்ள வீட்டின் முதல் மாடியில் தங்கி உள்ளார். வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு சென்றதும், இளம் பெண்களை தனது அறைக்கு அழைத்து வந்து செந்தில்குமார் உல்லாசமாக இருப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அதன்படி 2 நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் கோயில் முன்பு நின்று செந்தில்குமார் பேசியுள்ளார். அப்போது கோயிலில் வழிபாடு செய்ய வந்த கமல் உஸ்மான் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு, கமல் உஸ்மான் நேராக ‘மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று சூடம் ஏற்றி செந்தில்குமார் கோயில் அருகே தவறாக நடந்து கொள்வதை எனது உள் உணர்வு ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று கூறி கண்ணீருடன் வழிபாடு செய்தாராம் அப்போது சிவபெருமான் கமல் உஸ்மான் முன்பு தோன்றி ‘எனக்கும் அவன் கெட்டவன் என்று தான் தெரிகிறது.

அவனை கொன்று விடு’ என்று கூறிவிட்டு மறைந்து விட்டதாக தெரிவித்த அவர், சிவபெருமான் உத்தரவுப்படி கடவுளை கோபப்படுத்திய செந்தில் குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கமல் உஸ்மான் நேராக தனது அறைக்கு சென்று, கத்தியை எடுத்து கொண்டு, நேராக செந்தில் குமார் தங்கியுள்ள அறைக்கு சென்றுள்ளார். அப்போது அறையில் இருந்த செந்தில் குமாரை பார்த்து, கடவுளே உன்னை கொன்று விடு என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் ‘நீ இந்த உலகத்தில் வாழ தகுதியான நபர் இல்லை. நீ செத்து விடு என்று கூறியபடி அவரது வயிற்றில் ‘சிவ சிவ’ என்று கூறியபடி 18 முறை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பிறகு எந்தவித பதற்றமும் இன்றி சிவபெருமான் கூறியபடி காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கமல் உஸ்மான் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!