‘மாண்டஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, முதல்வரின் கான்வாய் காரில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, எம்எல்ஏ எபிநேசர், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் இளைய அருணா ஆகியோர் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேயர் பதவியில் இருக்கும் பிரியா, கான்வாய் காரில் தொங்கியபடி பயணித்தது பலரது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், காரில் தொங்கியபடி சென்றதற்கான காரணத்தை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “காசிமேடு பகுதியில் இரண்டு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஒரு இடத்தில் எங்களுடன் ஆய்வு செய்தார். அடுத்த இடத்தில் ஆய்வு செய்யும் முன் அவருக்கு முன்பாக அந்த இடத்திற்கு நாங்கள் சென்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இரண்டு இடங்களுக்கும் இடையில் தொலைவு அதிகமாக இருந்தது. இதனால் நான் நடந்து சென்று கொண்டு இருந்தேன். திடீரென அங்கு கான்வாய் வந்து கொண்டு இருந்ததால் அதிலேயே ஏறிவிடலாம் என்று ஏறிட்டேன். ஆனால் இதை வைத்து இவ்வளவு சர்ச்சை செய்வார்கள் என்று நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டோம். இதில் முதல்வருக்கு முன்பாக செல்ல வேண்டும் என்றுதான் சென்றேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. கான்வாயில் இப்படி வருமாறு என்னிடம் சொல்லவில்லை. இதை சர்ச்சையாக்கி உள்ளனர்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.