இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதுவரை, 10 வந்தே பாரத் ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை- கோவை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை மத்திய அரசு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே சென்னை- மைசூர் இடையில் அதிவேக வந்தே பாரத் தரையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை – கோவை இடையிலான தமிழகத்தின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று காலை 5:30 மணி அளவில் சென்னையில் தொடங்கப்பட்டது காலை 11.18 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலில் சேலம் கோட்ட மேலாளர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பயணித்து பரிசோதனை செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கோட்டம் ரயில்வே மேலாளர், “சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இந்த ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். இன்று அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயிலின் பயண நேரம் மற்றும் பராமரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணி அளவில் சென்னையிலிருந்து கிளம்பியது காலை 11.18 மணியளவில் கோவை வந்தடைந்துள்ளது.
பயண நேரமாக, 6 மணி நேரம் ஆகும் என அட்டவணையில் குறிப்பிட்டதன் படி, சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் கோவை வந்தடைந்துள்ளது. அந்த வகையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதற்காக அனைத்து பணியாளர்களுக்கும் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். முதற்கட்டமாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 536 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பெட்டிகள் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ரயில் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. தென் மண்டல அளவில் இரண்டாவது ரயில் சேவை ஆகும். தமிழகத்தில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஆக இது உள்ளது. இதற்கான கட்டண விவரங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்” என தெரிவித்தார்.