சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாபு என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரிடம் கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் யுவராஜ் ஆகியோர் காவல்துறைக்கு அபராதம் செலுத்தி இருசக்கர வாகனத்தை மீட்பதற்காக 5,000 ரூபாய் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்த பாபுவை தாக்கியதுடன், கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததுடன், பணப்பெட்டியில் இருந்து 1,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, தங்களை யாராவது பிடிக்க முயன்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது தொடர்பாக காயமடைந்த பாபு அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, தலையில் காயமடைந்த பாபு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை சென்னை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் விசாரித்தார். அரசு தரப்பில் பகவதிராஜ் ஆஜராகி, வாதங்களை முன்வைத்தார். அனைத்தை தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பாலாஜி மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் மீதான குற்றத்தை அரசு தரப்பில் நிரூபிக்கப்படாதாதால் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.