Skip to content
Home » சென்னையில் களைகட்டும் விமான சாகச நிகழ்ச்சியின் முழு ஒத்திகை…

சென்னையில் களைகட்டும் விமான சாகச நிகழ்ச்சியின் முழு ஒத்திகை…

  • by Senthil

விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தையொட்டி அக்.6ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெறவுள்ள விமான சாகசக் கண்காட்சியின் இறுதி ஒத்திகை இன்று நடைபெற்றது.

1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை தற்பொழுது 92வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி விமானப்படையின் பிரமிக்க வைக்கும் சாகச கண்காட்சி வரும் 6ம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது. இதில் பழமையான டக்கோடா ரக விமானங்கள் தொடங்கி அதிநவீன ரபேல் விமானம் வரை மக்களுக்கு மிக நெருக்கமாக பறந்து சாகசத்தில் ஈடுபட உள்ளன. இதற்கான இறுதி கட்ட ஒத்திகை இன்று நடைபெற்றது.

இன்றைய ஒத்திகையில் விமானப் படையின் சாரங் விமானப்படை ஹெலிகாப்டர் சாகச குழு, சூரியகிரன் விமான சாகச குழு, SU-30, ரபேல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லைட் காம்பேக்ட் ஏர்கிராஃப்ட் வகையான தேஜஸ், பிரச்சன், எல்.சி.எச் ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இது தொடர்பாக இந்திய விமான படையின் ஏர் மார்ஷல் பயிற்சிக் கமெண்ட் நாகேஷ் கபூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இன்று நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் 72 விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தியது. பெருமளவிலான மக்கள் கூட்டம் விமான சாகசத்தை கண்டுகளிக்க வருகிறார்கள்.  சாகசத்தை பார்க்கும் பொழுது அவர்கள் எதையும் சாப்பிடக்கூடாது என்பதுதான் அவர்களுக்கு நாங்கள் வைக்கும் வேண்டுகோளாக உள்ளது. இன்று நடைபெற்ற சாகச ஒத்திகையின் போது பறவைகளின் கூட்டம் அதிகளவில் வானில் பறந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. சாகசம் நடக்கும் நேரத்தில் வானில் பறவைகள் பறப்பது என்பது விமானிகளுக்கு பார்வையாளர்களுக்கும் ஆபத்தான ஒன்று. இங்கு உணவுப்பொருட்களை கொட்ட வேண்டாமென கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

அக்டோபர் 6 நடைபெறும் சாகசத்தை காண்பதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் வருவாரா என்பது குறித்த தகவல் இன்னும் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் அதற்கேற்ற ஏற்பாடுகளை நாங்கள் செய்திருக்கிறோம். 2003ல் இதே போன்ற வான் சாகச நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மெரினா கடற்கரையில் நடந்தது. அப்போது விண்ணில் சாகசம் நிகழ்த்திய சூரியகிரணை பார்த்து இரு இளைஞர்கள் விமான படையின்மீது ஆர்வம் இருப்பதாக கூறி முன்வந்தார்கள். அப்படி வந்த இரு இளைஞர்கள் தான் இன்று விண்ணில் விமானத்தை இயக்கியிருக்கிறார்களென தெரிவித்தார்.  20 வருடங்களுக்குப் பிறகு இதே வேலையில் நான் இருக்கமாட்டேன். ஆனால் இப்போது இந்த மெரினா கடற்கரையில் சாகச நிகழ்ச்சியை பார்க்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்து இருக்கிறார்கள். அவர்களில் கண்டிப்பாக பலபேர் விமானப்படையில் இணைந்து இதே போன்ற சாகசத்தை நிகழ்த்துவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

சிவில் நிர்வாகம் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். போக்குவரத்து சார்ந்த ஏற்பாடுகளும் சிறப்பாக முறையில் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான சாகச நிகழ்ச்சியை வெற்றிபெறவைக்க சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்திய விமான ஆணையமும் சிறப்பான முறையில் ஒத்துழைத்து உள்ளார்கள். தமிழக அரசும் நல்ல ஒத்துழைப்பை தந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்காக விமானங்களின் நேரங்களை மாற்றி அறிவித்து சிறப்பான ஒத்துழைப்பு தந்திருக்கிறார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!