சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜல்லிகட்டு போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை கடந்த காலகட்டத்தில் நடந்தது அது தொடரவேண்டும். ஆன்லைன் டோக்கன் முறையை கடைப்பிடிக்க கூடாது. இது படிக்காத ஏழை எளிய மக்களுக்கு தெரியாது. ஜல்லிகட்டு என்பது ஒரு விருந்தோம்பல் கலாச்சாரம். கிராம கமிட்டியினர் வெற்றிலைப்பாக்கு வைத்து அழைக்கும் விருந்தோம்பல் பண்பு ஆகும். இது ஆன்லைனில் கிடைக்காது.
விதிமுறைகளை ஜல்லிகட்டு வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் கடைப்பிடிக்க தயாராக உள்ளோம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் அரசு
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதால் ஆன்லைனில் டோக்கன்
வழங்கலாம்.மற்ற பகுதிகளில் கிராம கமிட்டியினர் வரி வசூல் செய்து சிரமத்தில் தான் நடத்துகிறார்கள்.இதனால் ஜல்லிகட்டு போட்டி டோக்கன்களை கிராம கமிட்டியினர் வழங்குவதுதான் சரியாக இருக்கும். ஜல்லிகட்டு போட்டி நடத்துவது கடினம்.
போலீசார் கிராம கமிட்டியினருடன் சேர்ந்து தள்ளுவாடிமாடு அடைப்பதை தவிர்த்து டோக்கன் முறைப்படி மாடுகளை அவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்அது போல் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கினால் அது ஜல்லிகட்டை ஊக்குவிப்பதுபோல் இருக்கும்.
முதல் ஜல்லிக்கட்டு புதுகோட்டையில் நடந்தது. கடந்த ஆண்டு புதுகோட்டை மாவட்டத்தில் அதிக இடங்களில் நடந்தது. ஜல்லிகட்டு போட்டி நடத்த அனுமதி கேட்பவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.சென்னையில் ஜல்லிகட்டு போட்டி நடத்துவது வரவேற்கதக்கது.
இவ்வாறு அவர் கூறினார். சென்னையில் முதல்வர் பிறந்தநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.