சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்த அனுமதி கோரி பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, இந்த விவகாரத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்? போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கைவைத்து கூறுங்கள் இந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதா? பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்?
அண்ணா பல்கலை. சம்பவத்துக்கு ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. பொதுநல வழக்கில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. காவல்துறையின் விசாரணை தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது, அண்ணா பல்கலைகழக வழக்கின் விசாரணையை தொடர்ந்து நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
இவ்வாறு கூறிய நீதிபதி, போராட்டத்துக்கு அனுமதி கோரிய பாமகவின் முறையீட்டை விசாரிக்கவும் நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதற்கிடையே. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திமுக அரசைக் கண்டித்து பாமக மகளிரணி சார்பில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பாதுகாக்க முடியாத திமுக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.