சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு ஒன்றின் விசாரைணயின் போது வக்கீல்களிடம் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலப் பெயரிலேயே குறிப்பிடுவேன் என்று கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில், Cr.P.C. பிரிவு 468-ன் கீழ், குற்றங்களை அறிந்து கொள்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட காலவரம்பு தொடர்பாக சட்டத்தின் முக்கியமான கேள்விக்கு பதிலளிக்க உதவுமாறு வக்கீல்களிடம் கேட்டுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “நான் IPC ஐ ஐபிசி என்று மட்டுமே குறிப்பிடுவேன், ஏனென்றால் எனக்கு அந்த மொழி (இந்தி) தெரியாது ” என்றார். இதையடுத்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் எஸ்.திருவேங்கடம், வழக்கறிஞர் முகமது ரியாஸ், கூடுதல் அரசு வழக்கறிஞர் (ஏபிபி) ஏ.தாமோதரன் மற்றும் பல வக்கீல்கள் இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் குறிப்பிட்டு நீதிமன்றத்திற்கு உதவினார்கள். அப்போது சி.ஆர்.பி.சி.யில் புதிதாக செய்யப்பட்ட பல்வேறு திருத்தங்களையும் வக்கீல்கள் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது சிஆர்பிசிக்கு மாற்றாக இருக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 சட்டத்தின் விதியை சுட்டிக்காட்ட விரும்பிய கூடுதல் அரசு வழக்கறிஞர் தாமோதரன், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 என்று சட்டத்தின் பெயரை முழுமையாக குறிப்பிடாமல் “புதிய சட்டம்” என்று நீதிபதியிடம் கூறினார். தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் தாமோதரன் புதிய சட்டத்தின் பெயரை குறிப்பிடாததை கண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமேதரன் புத்திசாலித்தனமாக அதை புதிய சட்டம் என்ற வார்த்தையில் முடித்துவிட்டார் என்று கூறினார். இதை கேட்டதும் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் சிரித்தனர். அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேலும் மூன்று அடிப்படை குற்றவியல் சட்டங்களை அவற்றின் அசல் ஆங்கிலப் பெயர்களிலேயே தொடர்ந்து குறிப்பிடுவேன் என்று வக்கீல்களிடம் கூறினார். தனக்கு இந்தி தெரியாது என்பதால் புதிய பெயர்களை சரியாக உச்சரிப்பது கடினம் என்றும் நீதிபதி காரணத்தை கூறினார்.